உலகத் தமிழினத் தலைவர்

உலகத் தமிழினத் தலைவர்
எதிரியைவிட துரோகி மோசமானவன். எதிரியை மன்னித்தாலும் துரோகியை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது! - மேதகு வே. பிரபாகரன்

Friday 5 April 2013


தோழர்களுக்கு வணக்கம்...

செக்கடிக்குப்பம் வலைப்பூவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

செக்கடிக்குப்பம்...

இப்பெயரை உங்களில் சிலர் ஊடகங்களின் வாயிலாக அறிந்திருக்கக் கூடும். ஆம்...தமிழகத்தின் பகுத்தறிவுக் கிராமங்களில் ஒன்றான செக்கடிக்குப்பம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

கடந்த அறுபது ஆண்டுகளாகப் படிப்படியான மாற்றம் பெற்று இன்று பலரும் அறிந்த பகுத்தறிவுக் கிராமமாக உயர்ந்துநிற்கிறது செக்கடிக்குப்பம்.

தமிழினவுணர்வும் பகுத்தறிவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கொண்ட அழகிய கிராமம் இது. விவசாயத்தை முதன்மையாகக்கொண்டு உழைக்கும் மக்களால் நிமிர்ந்துநிற்கும் கிராமம் எங்கள் செக்கடிக்குப்பம்.

1950கள் தொடங்கி இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி பெரியாரின் வழியில் காலூன்றி நிற்கிறது செக்கடிக்குப்பம்.

இதுவரையில் நடந்த சுயமரியாதைத் திருமணங்களுக்கான பதிவுகளாக திருமணப் பதிவேடு பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

காதல் திருமணங்கள்...சாதிமறுப்புத் திருமணங்கள் ..தாலி மறுப்புத் திருமணங்கள் இதில் அடங்கும்.

யாழ்முல்லை...யாழ்தமிழ்...அறிவுத்தமிழ்...தனித்தமிழ்...சங்கத்தமிழன்...
செந்தமிழ்க்கணினி...தனிக்கொடி... கன்னல்மொழி...விண்ணறிவு...தமிழோசை... தமிழ்த்தென்றல்...தனியரசு...பணியரசு ..ஈழத்தமிழ்..மொழித்தமிழ்..தமிழ்ச்சுடர்கனி..கனியரசன்..இளவரசன்...தமிழரசன்..ஓவியா..செஞ்சோலை..பகுத்தறிவாளன்..தமிழ்மறவன்..இலங்கைவேந்தன்..
...பொன்னரசி...தென்னரசி...அருளரசி...அருளரசன்...பேரிசைஞன்..கயல்விழி...
தமிழ்வேந்தன்...இளந்தமிழன்...தமிழ்நேசினி...தமிழ்நீதி..கோப்பெருந்தேவி..
தமிழ்த்தாய்..
சங்கத்தமிழ்..மணிமாறன்..கலைவாணன்..என்பனபோன்ற அழகான தமிழ்ப்பெயர்களையும் மதியழகன்...நெடுஞ்செழியன்...கப்பலோட்டியத் தமிழன்...பெரியார்...சீவானந்தம் ...சம்பத்...வீரமணி...பிரபாகரன்..வீரபாண்டியன் போன்ற தலைவர்களின் பெயர்களையும் தாங்கித் தமிழினவுணர்வோடு வளர்ந்து வரும் இளம்தலைமுறையினர் நிறைந்த ஊர் செக்கடிக்குப்பம்.

ஐம்பது ஆண்டுகால நெடும் போராட்டத்திற்குப் பின் குடிப் பழக்கம் 90 விழுக்காடு ஒழிக்கப் பட்டுள்ளது. கொள்கைப் பற்றோடு வாழும் குடும்பத்து இளைஞர்கள் யாரும் மது அருந்துவதில்லை. புகைப்பதில்லை. பாக்கு ..பான்பராக் போன்ற போதைப் பொருட்களைத் தொடுவதுமில்லை. தமிழக அரசின் சுகாதாரத் துறை “புகையில்லா கிராமம்” என்று சான்றளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. எமது ஊராட்சியின் எல்லைக்குள் இருந்த டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது.

செக்கடிக்குப்பம் கிராமத்துப் பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியைச் சிறந்த முறையில் பெறும் வகையில் “தந்தைபெரியார் ஈ.வெ..ரா.தாய்த்தமிழ்க் கல்விச் சாலை” நடைபெற்று வருகிறது. 1997-இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி. இன்றுவரைக்கும் தாய்த்தமிழ்க் கல்விப் பணியைச் செய்துவருகிறது.
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக “உலகத் தமிழ்மக்கள் அரங்கம்” சார்பில் உரூபாய் 1,00,000 (ஒரு இலட்சம்) காஞ்சிபுரத்தைச் சார்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பொறியாளர் அய்யா இலட்சுமணன் அவர்கள் உரூபாய் 50,000 (ஐம்பதாயிரம்) வழங்கியுள்ளனர்.

செக்கடிக்குப்பத்தின் சுவடுகள்...
அடுத்தடுத்த பக்கங்களிலும் பதியும்...

நன்றி..

தோழமையுடன்..
செக்கடிக்குப்பம் மக்கள்...

1 comment:

  1. மெய் சிலிர்கிறது ... தமிழ் உலகின் முன்னோடி செக்கடிகுப்பம் ..

    ReplyDelete